தமிழ்நாடு வெறுப்பு நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா: அரசு உடனே தாக்கல் செய்ய எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
நாடு முழுவதும் மதவாத சக்திகளால் வெறுப்புப் பேச்சு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, அது சமூகத்தில் இயல்பானதாக மாற்றப்பட்டு வரும் ஆபத்து அதிகரித்து வருகிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.;
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில், வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் சிறப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
நாடு முழுவதும் மதவாத சக்திகளால் வெறுப்புப் பேச்சு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, அது சமூகத்தில் இயல்பானதாக மாற்றப்பட்டு வரும் ஆபத்து அதிகரித்து வருகிறது. இதனால் மதம், சாதி, மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் பிளவு, வன்முறை, பதற்றம் அதிகரித்து வருகின்றன. தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தாலும், அதிகரித்துவரும் வெறுப்பு நடவடிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே தடுப்பது மிக அவசியம் என்பதால் தமிழக அரசு இந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.
அண்மையில் கர்நாடக மாநில அரசு நிறைவேற்றிய “கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா 2025” போன்ற வலுவான சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழக அரசு உடனடியாக “தமிழ்நாடு வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டமசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
இச்சட்டத்தில், வெறுப்புப் பேச்சு பரப்புபவர்களுக்கும், வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வேண்டும். மேலும், வெறுப்பை ஊக்குவிக்கும் அமைப்புகளுக்கு கூட்டுப் பொறுப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதோடு வெறுப்பைக் கடத்தும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெறுப்புப் பேச்சு உள்ளடக்கத்தையும் இச்சட்டத்தின் கீழ் உட்படுத்தி, அதனை பரப்புபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை ஆகியவை பேணப்பட வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது. வெறுப்பு பரவ விரும்புபவர்களுக்கு எதிராக, சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து முற்போக்கு சக்திகளும், அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
எனவே, தமிழக அரசு இந்த மிக முக்கியமான கோரிக்கையை ஏற்று, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.