141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று 141 கல்லூரிகளுக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-13 21:50 IST

கோப்புப்படம் 

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

இந்த சூழலில், பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள் இருக்கக்கூடிய 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை அடுத்த 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என்று 141 கல்லூரிகளுக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை சரி செய்யவில்லை என்றல் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 141 கல்லூரிகள் எவை எவை என்று தெரியாத சூழலில், அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

45 நாட்களுக்குள் குறைகளை சரி செய்யாத சூழல் ஏற்பட்டால், அந்த கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் 141 கல்லூரிகளும் அதன் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்