மழை நீர் ஒழுகும் வீட்டில் பெற்றோர்.. கண்ணீர் விட்ட மாணவிக்கு புதிய வீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாணவிக்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.;

Update:2025-09-26 13:35 IST

தென்காசி,

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு'- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாபெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய தென்காசி மாவட்டத்தை பிரேமா என்ற மாணவி பேசுகையில், “நான் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். மழை நேரத்தில் நான் பாதுகாப்பாக இருப்பேன். ஆனால் எங்களது வீடு மழை நேரங்களில் ஒழுகும். மழை நேரங்களில் அப்பா, அம்மா எப்படி வீட்டில் தங்கி இருப்பார்கள் என எண்ணிக்கொண்டே இருப்பேன். விரைவில் அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என அந்த மாணவி பேசி இருந்தார்.

இந்த நிலையில், அந்த மாணவிக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்