கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை பழைய ஓய்வூதியத் திட்டம்.;

Update:2026-01-18 21:59 IST

சென்னை,

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுதான் ‘ஜாக்டோ-ஜியோ’. இந்த அமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக்களத்தில் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக ஆளும் அரசையும், எதிர்க்கட்சிகளையும் அணுகி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இந்தநிலையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்புக்கு எதிராக அந்த அமைப்பின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு ‘போட்டா-ஜியோ’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இந்த 2 அமைப்புகளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து இருந்தனர்.

இதனையடுத்து அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டனர்.இந்த சூழலில், ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோவைத் தொடர்ந்து புதிதாக ஆக்டோ-ஜியோ (ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்திருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அதன்படி, வருகிற 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூறியிருக்கின்றனர். புதிய அமைப்புகள் தொடர்ந்து உருவாகுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்த அமைப்புடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்