ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா.: தமிழர்களுக்கு பெருமை - முத்தரசன்
பெரியார் படத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்து, சிறப்புகளை எடுத்துக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களால் 1925 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா கண்டுள்ளது.
சமூக உற்பத்தியில் உருவாகும் செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் ஆதிக்க சக்திகள் ஏணிப்படி முறையில் அமைந்த சாதிய அடுக்கு முறை சமூக கட்டமைப்பை உருவாக்கியது. மனிதர்களை சாதிகளாகப் பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை கற்பித்தது, மூட நம்பிக்கைகளை வளர்த்து, உழைக்கும் மக்களின் அறிவுக் கண்களை குருடாக்கி, அறியாமை இருட்டில் நெட்டித் தள்ளி வந்தது.
சமூக ஆதிக்க சக்திகளின் சதிச்செயலை எடுத்துக் கூறி, சமூக சீர்திருத்த புரட்சியை முன்னெடுத்த பெரியோர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் இன்று உலகளாவிய சமூகநீதிப் போராளிகளுக்கு கருத்தாயுதமாக பயன்பட்டு வருகின்றது.
“தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் - அந்தப் பெரியாரின் மண்டை சுரப்பை உலகு தொழும்” என்ற பாவேந்தரின் கவி வாசகம் செயலாக்கம் பெற்று வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும், உலகப் புகழ்பெற்ற தொன்மைவாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பேரறிஞர் பெருமக்களை போற்றி பாராட்டி வந்திருக்கிறது. இந்த வரிசையில் நேற்று முன்தினம் 04.09.2025 ஆம் தேதி பெரியார் ஈ.வெ.ரா. திருவுருவப் படத்தை தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பெரியாரின் சிறப்புகளை எடுத்துக் கூறியிருப்பது பொருத்தமானது, வரவேற்கத்தக்கது. இந்த நிகழ்வில் சுயமரியாதை இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த பங்களிப்பு தொடர்பான இரண்டு ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமையளிக்கும் நிகழ்வுக்கும், இதனை ஏற்பாடு செய்த அறிஞர் பெருமக்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.