திருச்செந்தூரில் பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுத்த விவகாரம்: கன்டக்டர், டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திருச்செந்தூரில் பஸ்களில் ஏறவிடாமல் பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் கன்டக்டர், டிரைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.;
ஆறுமுகநேரி
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சில தனியார் பஸ்களில் தூத்துக்குடிக்கு செல்லும் பயணிகளை மட்டுமே முதலில் ஏற்றுவதாகவும், இருக்கை நிரம்பிய பிறகே காயல்பட்டினம் மற்றும் இடையில் உள்ள பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண்ணும், வயதானவர் ஒருவரும் திருச்செந்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர்.அவர்கள் காயல்பட்டினம் செல்வதற்காக தூத்துக்குடி செல்லும் தனியார் பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது அந்த பஸ் கன்டக்டர் வீரபுத்திரன், அவர்களை தடுத்து நிறுத்தினார்.
மேலும் பஸ் புறப்படும்போது ஏறிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.இந்நிலையில் நேற்று தனியார் பஸ் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளுடனான சமரச கூட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமை தாங்கினார். அவர் கூறுகையில், ‘‘திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் காயல்பட்டினம் செல்லும் பயணிகளையும் ஏற்றிச்செல்லும் நடைமுறை தொடரும். பெண்கள், வயதானவர்களை முதலில் ஏற்ற வேண்டும். பயணிகளை ஏறவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் கன்டக்டர், டிரைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து பெண்ணை பஸ்சில் ஏற்ற மறுத்த கன்டக்டர் வீரபுத்திரனுடைய உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து அலுவலருக்கு திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி பரிந்துரை செய்தார்.