பொங்கல் பண்டிகை: ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வு
பண்டிகை விழா காலங்களின்போது ஆம்னி பஸ் 'டிக்கெட்' கட்டணம் பயணிகளை பதற வைக்கும் வகையில் உயர்த்தப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.;
சென்னை,
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு 'டிக்கெட்' கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது.
ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற ஆவல், ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது. மேலும் அவசியம் மற்றும் அத்தியாவசிய பயணத்தை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதால், எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டும். பஸ்சில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிர்ப்பந்தத்துக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர்.
மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே வழக்கமான நாட்களை காட்டிலும் பண்டிகை, விழா காலங்களின்போது 'டிக்கெட்' கட்டணம் பயணிகளை பதற வைக்கும் வகையில் உயர்த்தப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக சென்னையில் வசித்து வரும் வெளியூர் மக்கள் பஸ், ரெயல்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம்.
ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் முதல் விருப்பம் ஆம்னி பஸ்கள் தான். காரணம், கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிப்பதை விட கோயம்பேட்டில் இருந்தே தனியார் பஸ்களில் பயணிக்க முடியும் என்பதால் ஆம்னி பஸ்களை தேர்வு செய்கிறார்கள்.
இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது. அதாவது, வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800, ரூ.850-க்கு ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து நெல்லைக்கு வழக்கமாக ரூ.1,400 முதல் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.4,200 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1,200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,100 ரூபாய் வரை வசூலிக்கப்படும் நிலையில் தற்போது அதிகபட்சமாக ரூ.3,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.900 ரூபாய் முதல் ரூ.1,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ரூ.4200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.600 ரூபாய் முதல் ரூ.900 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 21 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.