பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்-காட்பாடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.;
கோப்புப்படம்
விழுப்புரம்,
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், அக்கோவிலுக்கு சென்று அங்குள்ள மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் விழுப்புரம்- காட்பாடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் (ஞாயிறு, திங்கள்) காலை 11.05 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06102) மதியம் 2 மணிக்கும், இரவு 9.45 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06104) நள்ளிரவு 12.50 மணிக்கும் காட்பாடி ரெயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல் மறுமார்க்கத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் காட்பாடி- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06101) மாலை 5.30 மணிக்கும், நாளையும், நாளை மறுநாளும் (திங்கள், செவ்வாய்) நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் காட்பாடி- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06103) அதிகாலை 4.25 மணிக்கும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
8 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில்கள், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.