சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு

எதிர்பார்த்த அளவு கனமழை இல்லை என்பதால் ஏரிகளுக்கு நீர் வரத்து பெரிய அளவு வரவில்லை.;

Update:2025-11-30 18:24 IST

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. வங்க கடலில் உருவான டித்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் சென்னையில் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குடிநீர் ஏரிகளில் இருந்து நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரியில் இருந்து 3500 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 1500 கன அடியும் உபரிநீர் திறக்கப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்த நிலையில் எதிர்பார்த்த அளவு கன மழை இல்லை. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து பெரிய அளவு வரவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது. பூண்டியில் இருந்து 750 கனஅடி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தலா 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று மதியத்திற்கு பின்னர் புழல் ஏரியில் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் பலத்த மழை பெய்தால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 35 அடியில் 33.15 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் 2565 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1890 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதேபோல் புழல் ஏரியில் 21 அடியில் 18.7 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் 2751 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து 1216 கன அடியில் இருந்து 800 கன அடியாக குறைந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில் 21.2 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2908 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது..

சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கனஅடியில் 520 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 438 மில்லியன் கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் .

Tags:    

மேலும் செய்திகள்