முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

அரசு கல்லூரிகளில் முனைவர் பட்டம் பயிலும் பல முழுநேர மற்றும் பகுதிநேர ஆய்வாளர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியை சேர்ந்தவர்கள்.;

Update:2026-01-26 18:21 IST

சென்னை,

தமிழக அரசு சார்பில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கிட தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட மாணவர் நல நோக்கங்களுடன் தமிழக அரசு தொடங்கிய 'உலகம் உங்கள் கையில்' திட்டம், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் சிறப்புமிக்க முயற்சியாகும். இதன் முதல் கட்டமாக 10 லட்சம் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த முற்போக்கான திட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி மனதார பாராட்டுகிறது. தமிழக அரசின் இத்தகைய மாணவர் நல திட்டங்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளன.

தமிழக அரசு இந்த திட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் உள்ளடக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான முனைவர் பட்ட ஆய்வாளர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் முனைவர் பட்டம் பெறுவது, மாநிலத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சான்றாக உள்ளது.

இச்சாதனை, சமூக நீதி மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு கொள்கைகளால் சாத்தியமானது.

அதேநேரம், அரசு கல்லூரிகளில் முனைவர் பட்டம் பயிலும் பல முழுநேர மற்றும் பகுதிநேர ஆய்வாளர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியை சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாட்டின் சமூக நீதி மாதிரியின் வெற்றிக்கான அளவுகோலாக விளங்குகின்றனர். அவர்களது ஆய்வுப்பணிகள் முழுவதும் கணினி சாதனங்களை அடிப்படையாக கொண்டவை. தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு, இலக்கிய ஆய்வு, தீசிஸ் எழுதுதல்-திருத்துதல், சிறப்பு தரவுத்தள அணுகல், புள்ளியியல் மென்பொருள் இயக்கம், ஆய்வு கட்டுரை தயாரிப்பு, சர்வதேச ஆய்வாளர்களுடன் தொடர்பு போன்ற அனைத்தும் கணினியை சார்ந்தே நடைபெறுகின்றன.

எனவே, இத்தகைய ஆய்வாளர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது அவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

ஆகவே, 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் உள்ளடக்கி, அவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோருகிறேன். இது சமூக நீதியை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு மைல்கல்லாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்