விஜய்யை முதலில் வெளியே வரச் சொல்லுங்கள் - டிடிவி தினகரன் தாக்கு
விஜய்யால் விஜயகாந்த் இடத்தைதான் தொட முடியும். எம்ஜிஆர் இடத்தை தொட முடியாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
தேனி,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விஜய்யை முதலில் வெளியே வரச் சொல்லுங்கள். தெரியாமல் எங்களிடம் வந்து உரச வேண்டாம். நாங்களெல்லாம் வெகுண்டு எழுந்தால் தப்பாகிப் போய்விடும். சினிமாவில் நடித்து வருபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா. முதலில் வெளியில் வந்து ஊடகங்களை சந்தியுங்கள். எம்ஜிஆர் மாதிரி விஜய் வருவார் என்று நான் சொல்லவில்லை.
பாப்புலாரிட்டி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிக்கப்போகிறாரா?.. விஜயகாந்த் இடத்தைதான் விஜய்யால் தொட முடியும். எம்ஜிஆர் இடத்தை விஜய்யால் தொட முடியாது.
அண்ணா போல் இன்னோர் அண்ணா பிறக்க முடியுமா?.. நடிக்க வருபவர்கள் எல்லாம் அண்ணாவாகி விட முடியாது. எங்கள் கட்சியையும் ஆட்சியையும் ஊழல் ஆட்சி என்று சொல்கிறார். அப்போது எம்ஜிஆர் படத்தை போட்டு ஏன் ஓட்டு கேட்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.