சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-07 22:56 IST

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்திற்குட்பட்ட பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்த தந்தை மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மூர்த்தி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களுக்கிடையே நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மூர்த்தி அவரது மகன் தங்கபாண்டியன் தாக்கியதாகவும், இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களை விலக்கிவிட்டு, காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்தக் கொலைக்கு மூலக் காரணம் மது என்றும் கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பட்டப் பகலில் படுகொலைகள், கொள்ளைகள், போதைக் கலாச்சாரம், பாலியல் துன்புறுத்தல்கள் என சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு சீரழிவுகளுக்கு மூலக் காரணமாக விளங்குவது மது என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் காரணமாக, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. காவல் துறையினரையே தாக்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு ஏற்படுகிறது என்றால், அந்த அளவுக்கு மென்மையானப் போக்கினை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழுக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைதான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கொலைவெறித் தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்க வேண்டிய கடமையும் தி.மு.க. அரசிற்கு உண்டு.

முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்கவும், உயிரிழப்புகளுக்கு மூலக் காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்