சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு வெளியிட்டு ‘வாபஸ்'
தேர்வுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.;
FILEPIC
சென்னை,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியில் இருக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அதில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தெரிவித்தது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வை எழுத வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதுதவிர தனியார் பள்ளிகளிலும் இந்த தேர்வை எழுத வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு 3 முறை நடத்த திட்டமிட்டு, அதுதொடர்பான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் ஜனவரி மாதத்துக்கான தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என ஆசிரியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அதுதொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று காலையில் வெளியிட்டது. அதில் சிறப்பு தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 24-ந் தேதியும், தாள்-2 தேர்வு 25-ந் தேதியும் நடைபெறும் என்றும், இதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு பிற்பகலில் வாபஸ் பெறப்பட்டது. முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.