உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான 1,084 மனுக்கள் பெறப்பட்டது.;
தூத்துக்குடி 1-ம் கேட் அருகில் உள்ள மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் 27, 28 மற்றும் 39 வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மின் இணைப்பு மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுவின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்குரிய ஆவணத்தை பயனாளியிடம் வழங்கினார். மேலும் இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான 1,084 மனுக்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தொடர்பான 72 மனுக்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தொடர்பான 65 மனுக்கள், மருத்துவம் மக்கள் நல்வாழ்வு தொடர்பான 78 மனுக்கள், எரிசக்தி துறை சம்பந்தப்பட்ட 54 மனுக்கள் உட்பட மொத்தம் 1,512 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின்போது மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் முரளிதரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரண்யா, ராமு அம்மாள், வட்டச் செயலாளர்கள் சாமிநாதன், கருப்பசாமி, பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், வட்ட பிரதிநிதிகள் சண்முகவேல், அருணாச்சல கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.