நாடு முழுவதும் கைவரிசை காட்டிய 3 திருடர்கள்; வங்கதேச எல்லையில் மடக்கிப் பிடித்த தமிழக காவல்துறை
சைபர் கிரைம் குற்றவாளிகளை எல்லை தாண்டி சென்று பிடித்து வந்த தனிப்படை போலீசாரை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டினார்.;
சென்னை,
தமிழகம் முழுவதும் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தபடியே மோசடி பேர்வழிகள் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாயை ஆன்லைன் மூலமாக பறித்துக் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த இருவரிடம் ரூ.2 கோடியை சுருட்டிய 3 பேரை வங்கதேச எல்லை வரை சென்று தமிழக போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு கோடிகளை குவிக்கலாம் என்று ஆசைவார்த்தைகளை அள்ளி வீசி மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
இதுபோன்று முகநூல் வழியாக மோசடியான லிங்க்கை அனுப்பியுள்ளனர், இதை நம்பி தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடியே 64 வட்சத்தை முதலீடு செய்துள்ளார். இதன்பிறகே அது மோசடியான வர்த்தக நிறுவனம் என்பது தெரியவந்தது. இதேபோன்று இன்னொருவர் ரூ.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
இந்த 2 மோசடி சம்பவங்கள் தொடர்பாகவும் தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இணையதளம் வழியாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ரூ.2 கோடியை சுருட்டிய நபர்கள் வங்கதேச எல்லை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று மேற்கு வங்காளத்தை சேர்ந்த சகசாதா ஹுசைன் என்ற வாலிபரை கைது செய்தனர். 23 வயது வாலிபரான இவர் வங்க தேச எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் பதுங்கி இருந்தார்.
அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். நாடு முழுவதும் இவர் மீது 29 வழக்குகள் உள்ளன. இதேபோன்று மேற்கு வங்காளத்தை சேர்ந்த அமித்சகா என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வழக்குகளில் தொடர்புடைய இவருடன் போலி வங்கி கணக்கு முகவராக செயல்பட்ட கமலேஷ் தேப்நாத் என்பவரும் கைதானார்.
இதையடுத்து சைபர் கிரைம் குற்றவாளிகளை எல்லை தாண்டி சென்று பிடித்து வந்த தனிப்படை போலீசாரை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டினார். இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் வலைதளங்களில் எந்த காரணத்தை கொண்டும் பொது மக்கள் வங்கி கணக்குகளை பகிர வேண்டாம். சைபர் கிரைம் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.