தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் முன்னேற்பாடு பணிகள் தொடக்கம்

காளைகளை அடக்கும் வீரர்களும் பயிற்சி செய்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.;

Update:2025-12-26 13:54 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித விண்ணேற்பு அன்னை தேவாலயத்தின் அருகில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் வருகிற 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதனை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாடிவாசல் அருகே முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டின் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களிடமும், பார்வையாளர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஜல்லிக்கட்டுக்காக மாடு வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை மண் குவியல் மீது முட்ட விட்டும், தண்ணீரில் நீந்த விட்டும் பல்வேறு பயிற்சிகளை காளைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இதேபோல் காளைகளை அடக்கும் வீரர்களும் பயிற்சி செய்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் இந்த ஜல்லிக்கட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்