அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
5 ஆண்டுகள் வரை இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய பிரிவுகளில் மட்டும்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், 5 ஆண்டுகள் வரை இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 2020-ல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதே போல் பால்வளத்துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக விருதுநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.