தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய் திட்டம்?
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் கூட்டணியில் இணையவில்லை.;
சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்ற நிலை நீடிக்கிறது.
"ஆட்சியில் பங்கு தருவோம்" என்ற வாக்குறுதியுடன் கூட்டணி கதவை திறந்து வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் இணையவில்லை. இதனால், "வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்று மாற்றி யோசித்த த.வெ.க. தலைமை, 40 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இருப்பினும் தேர்தலை எதிர்கொள்ள தவெக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாநாடு, 3 பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரையில் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது எந்த பகுதியில் மாநாடு நடத்தலாம் என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.