திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் தீர்ப்பு மத மோதலை உருவாக்கும்; செல்வப்பெருந்தகை

திருப்பரங்குன்றம் மலையை வைத்து வகுப்புவாத சக்திகள் அரசியல் ஆதாயம் பெற முற்படுகிறது என கூறினார்;

Update:2025-12-03 16:54 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் தீர்ப்பு மத மோதலை உருவாக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

நடப்பாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம உச்சி பிள்ளையார் கோயில் அருகே மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தான் தீபம் ஏற்றுவது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு மாறாக இந்த தீர்ப்பு அமைந்திருப்பதால் மதரீதியாக மோதல்களை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிற வகையில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

சமீபகாலமாக திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து வகுப்புவாத சக்திகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அரசியல் ஆதாயம் பெற முற்படுகிற நிலையில் இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. அரசமைப்பு சட்டப்படி இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசு என்பதாக அரசமைப்பின் சட்ட முகப்புரை பறைசாற்றுகிறது. மக்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஒரு சமயத்தை மேற்கொள்ள, பின்பற்ற உரிமை கொண்டுள்ளார்கள். இத்தகைய உரிமைகளை பாதிக்கிற வகையில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

எனவே, மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினால் எந்தவித சட்ட ஒழுங்கும் சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் நீதிமன்ற மேல்முறையீட்டின் மூலமாக மதச்சார்பற்ற சக்திகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்