வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமிழகத்தில் 59 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு
நவம்பர் 29-ந்தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 50.91 லட்சம் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர்.;
சென்னை,
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த நவம்பர் 34-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.
இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க டிசம்பர் 4-ந்தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப் பட்டு இருந்தது. தற்போது இப்பணிக்காக கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.கடந்த மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதே போல் 27 லட்சத்து 1050 பேர் நிரந்தரமாக முகவரி மாறி சென்று உள்ளனர்.
கண்டுபிடிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை 5.19 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஆக மொத்தம் 59 லட்சம் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இடைக்கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.
மேலும் நவம்பர் 29-ந்தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 50.91 லட்சம் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை இன்னும் சமர்ப்பிக்காமல் உள்ளனர். கணக்கெடுப்பு பணி முழுமையாக முடியும் போது 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம் உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர் இடம் பெறாமல் உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களை கண்டறிந்து அவர்கள் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் உள்ள அவர்களின் பெயரை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.