ஊட்டி, கொடைக்கானலில் உறைபனி சீசன் - ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

புல்வெளிகள் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல் ரம்மியாக காட்சியளிக்கிறது.;

Update:2025-12-13 16:59 IST

திண்டுக்கல்,

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது. இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் பூமி, ஜிம்கானா பகுதிகளில் புல்வெளியில் உறைபனியும், அதற்கு மேல் பனிமூட்டமும், அதே சமயம் எதிர்மலையில் தென்படும் லேசான வெயிலும் சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

குறிப்பாக புல்வெளிகளில் இருக்கும் புற்கள் மீது உறைபனியானது அதிகாலை நேரங்களில் முத்து மணிகளைப் போல் ஒட்டிக்கொண்டு அழகாக காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் பல்வேறு கோணங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நட்சத்திர ஏரியில் பனிமூட்டத்துடன் காணப்பட்ட ரம்மியமான சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதே போல், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. புல்வெளிகள் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல் ரம்மியாக காட்சியளிக்கிறது. மேலும், வாகனங்கள் மீதும் வெள்ளை பஞ்சு படலம் போல் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்