இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்; அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஆண்டு தேர்வுகள் ஒரு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.;

Update:2026-01-24 15:06 IST

சென்னை,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009-மே மாதம் 31-05-2009 தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம்தான் அளிக்கப்படுகிறது.

2006-11-ம் ஆண்டு காலத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போல இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டது. பின்னர் 16 ஆண்டுகளை கடந்தும் இந்த அநீதி துடைக்கப்படவில்லை. இந்த அநீதியை களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியர்களை கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கி விடுவது என தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. டிசம்பர் 26-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கியபோது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதன்பின் நடக்கும் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இவ்வளவு நாள்கள் நீடித்ததில்லை; மாணவர்களின் படிப்பும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டு தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், இதுகுறித்த எந்த கவலையும் தி.மு.க. அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; இன்னொருபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனும்போது, ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால், 25-ஆம் நாளாக போராட்டம் நீடிக்கும் போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தி.மு.க. அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல முறை பேச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், ‘‘நிதிநிலை சரியானவுடன் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்பதையே அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாராக இல்லை. அவர்களின் நிலைப்பாடு சரியானதும் கூட.

சென்னையில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்த பின், அதனடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.

ஆனால், அதன்பின் 3 ஆண்டுகளாகும் நிலையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை; ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் வெற்று வாக்குறுதிகளை ஏற்க மறுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர். மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அடக்குமுறைகள் மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்