பரபரக்கும் அரசியல்களம்: ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி: அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு
சபாநாயகர் அறைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்ற நேரத்தில், அவரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார்.;
சென்னை,
தமிழக சட்டசபை கடந்த 20-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடந்து வந்தது. நிறைவு நாளான இன்று முதல்-அமைச்சரின் பதில் உரை இடம்பெற்றது. ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் அவைக்கு வந்திருந்தனர். சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அறைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்ற நேரத்தில், அவரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் - பி.கே.சேகர்பாபு இடையேயான சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது, தி.மு.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வத்தை சேகர்பாபு வலியுறுத்தியதாக தெரிகிறது.
அப்போது, தனக்கும், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.வுமான அய்யப்பனுக்கும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும் என்றும், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்ய சபா சீட் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. தி.மு.க. தரப்பில் இருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டப்படும் பட்சத்தில் தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் ஐக்கியமாவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.