திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் கூடாது - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டிச.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.;

Update:2025-12-05 13:33 IST

மதுரை,

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட கலெக்டர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் இரு நீதிபதிகள் (நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன்) அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மாவட்ட கலெக்டர், காவல் ஆணையரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

இதுதொடர்பாக நீதிபதிகள் அமர்வு மேலும் கூறுகையில், “அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம். உத்தரவுகள் பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம். அனைத்து வழக்குகளையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்கப்படும். இந்த பிரச்சனை தீவிரமானது புதிய இடையீட்டு மனுதாரரை சேர்க்க வாய்ப்பு இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் தேவையற்ற விமர்சனம் வைப்பதை ஏற்க முடியாது. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான விவாதம் கூடாது.

மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைவருக்கும் ஐகோர்ட்டின் மாண்பை கடைபிடிக்கும் வகையில் பொதுவெளியில் பேச வேண்டும். விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன்பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது” என்று தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

Tags:    

மேலும் செய்திகள்