கண்ணம்மாபேட்டையில் இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம்: சென்னை மாநகராட்சி தகவல்
கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.;
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி, கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செல்லப் பிராணிகளுக்கான நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், நாய்களைக் கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செல்லப்பிராணிகள் வளர்ப்போரின் நலன் கருதி, இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்வது மற்றும் எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-141, கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரியூட்டு தகனமேடை அக்டோபர் 2025 முதல் இயங்கி வருகிறது. இதில் அக்டோபர் 2025 முதல் இதுநாள்வரை 439 இறந்த செல்லப்பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட மூலக்கொத்தளம், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மயிலாப்பூர் மயானபூமி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கண்ணம்மாபேட்டை மயானபூமி ஆகிய இடங்களில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்வதற்கான மயானபூமிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.