தூத்துக்குடி: குளிக்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூலி வேலை செய்து வந்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு முத்துராமலிங்கத்தேவர் நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காந்திமதி (வயது 48). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். காந்திமதி கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மதியம் 2 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது காந்திமதி கிணற்று தண்ணீரில் பிணமாக மிதந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கயத்தாறு போலீசார் சம்பவ கிணறுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் கழுகுமலை தீயணைப்பு துறையினர் அங்கு சென்று கிணற்றில் கிடந்த காந்திமதி உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.