மின் கட்டணம் 80 சதவீதம் உயரும்: மின்துறை பொறியாளர்கள் எச்சரிக்கை
மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்.;
சென்னை,
தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது ,
6-வது முறையாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை கொண்டு வரவுள்ளது. கடந்த 5 திருத்தங்களையும் அனைத்து மாநிலங்களும் கடுமையாக எதிர்த்ததால் கைவிடப்பட்டன. தற்போது கொண்டு வரும் சட்டதிருத்தம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை வினியோக நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்க வழிவகுக்கும்.
மேலும், இந்த சட்ட திருத்தம் ரெயில்வே, மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 சதவீதம் குறைப்பதுடன், வீட்டு உபயோக மின் கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தும்.
புதிய சட்டத்திருத்தங்களுக்கு, வினியோக நிறுவனங்களின் கடனை மத்திய அரசு காரணமாக காட்டுகிறது. ஆனால், வினியோக நிறுவனங்களின் நஷ்டத்திற்கு மத்திய அரசு தனியாருக்கு சாதகமாக வகுத்த மின்சார கட்டணக் கொள்கைகளும், விதிகளுமே காரணம். ஏற்கனவே, மின்துறையில் உற்பத்தி நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டது.
தற்போது வினியோக நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும். எனவே, மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.