இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025

Update:2025-08-10 09:19 IST
Live Updates - Page 3
2025-08-10 07:16 GMT

'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.

முன்பதிவு தொடங்கிய அனைத்து மாநிலங்களிலும், ஜெட் வேகத்தில் விற்பனையாகிறது. இந்நிலையில், 'கூலி' டிக்கெட் ரூ. 2,000 விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில், ஆன்லைன் முன்பதிவிலேயே ரூ. 2,000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சில இடைத்தரகர்கள் ரூ. 5,000 வரை டிக்கெட் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

2025-08-10 07:04 GMT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சிக்கும்.

அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

2025-08-10 07:01 GMT

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தொடக்கம்...வாக்களிக்கும் 2,000 உறுப்பினர்கள்

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது. 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்களிக்கின்றனர்.

தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.

2025-08-10 06:29 GMT

சிவகங்கை: மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மீனாள் (வயது 57) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்து உள்ளார். வாகன ஓட்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

2025-08-10 06:24 GMT

மேலும் 3 வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமர் தொடங்கி வைத்தார்

பெங்கருளுவில் நடைபெற்ற விழாவில் 3 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும்

இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2025-08-10 05:39 GMT

விழுப்புரம் வாணியம்பாளையத்தில் தேனீக்கள் கொட்டியதில் தவில் இசை கலைஞரான கோபு (வயது 55) என்பவர் பலியானார்.

இதுதவிர, காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

2025-08-10 05:26 GMT

    தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் குல்சன் வன பகுதிகளில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த புலனாய்வு தகவலை தொடர்ந்து அவர்களை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கை பணியானது, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. அப்போது, ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில், 10-வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்