இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மும்பையில் கடற்படை படகு மோதி, பயணிகள் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 101 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் 24-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பூடான் அருகே டோக்லாம் எல்லைப்பகுதியில் சீனா ரகசியமாக கிராமங்களை உருவாக்கி வருவது சாட்லைட் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு மிக நெருக்கமான இடங்களில் 8 கிராமங்களை சீனா அமைத்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். எல்லை பகுதியில் 22 கிராமங்களை சீனா திட்டமிட்டு உருவாக்குவது தெரியவந்துள்ளது.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சொன்ன வார்த்தை திரும்பப் பெறப்பட வேண்டும். மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நெல்லை, இருக்கன்துறை அருகே மண் சரிவு ஏற்பட்ட குவாரி, விதிமுறைகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கல்குவாரியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக சேர்ந்து தற்போது எஸ்பியாக பதவி வகிக்கும் 26 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார்.
வளைகுடா நாடுகளில் குவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி . சமீபத்தில் குவைத் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார். அப்போது தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடல்நீர் மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ உயருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை அருகே கடலில் வேகமாக சென்ற படகு மற்றொரு படகு மீது மோதி விபத்திற்குள்ளானது. கடலில் தத்தளித்த சுமார் 60 பயணிகளை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபெண்டா குகைக்கு சென்ற போது படகு விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது.
நெல்லை அருகே இருக்கன்துறை கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருள்குமார் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷ் நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் மற்றொரு தொழிலாளி லேசான காயங்களுடன் உயிர் தப்பியாக கூறப்படுகிறது.