பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2025-12-11 14:57 IST

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் கழுகுமலை தனிபிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை வடக்கு தெரு பகுதியில் மோட்டார் பைக்கில் 2 மூட்டைகள் ஏற்றி வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் கழுகுமலை ஆறுமுகம்நகர் பகுதியை சேர்ந்த அய்யாபிள்ளை மகன் உதயசிங் (வயது 50), வியாபாரி என்பதும், அவர் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு வெளியில் விற்று வந்துள்ளார் என்பதும், நேற்று முன்தினம் ரேசன் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து உதயசிங்கை பிடித்து, அவரிடம் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்து, தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசிங்கை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்