வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
சாயர்புரம் பகுதியில் 2 பேர் சேர்ந்து பூட்டி இருந்த 2 வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டி.வி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை திருடி ஆட்டோவில் கடத்தி சென்றனர்.;
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் கடந்த 2023-ம் ஆண்டு தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துராமன், ஏரல் அருகே உள்ள தம்படி பகுதியை சேர்ந்த சந்தன மகாராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பூட்டி இருந்த 2 வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அந்த வீடுகளில் இருந்த டி.வி., ஏ.சி. மிஷின், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை திருடி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி குற்றவாளிகளான முத்துராமன், சந்தன மகாராஜன் ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.