என்ஜினில் கோளாறு: பாதியிலேயே ரெயில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.;

Update:2025-10-11 01:29 IST

கடலூர்,

கடலூாில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை சேலம் நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டது. விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், வழக்கம்போல் முன்பகுதியில் இருந்த என்ஜின் மட்டும் கழற்றப்பட்டு, பின்பகுதியில் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து பயணிகள் ரெயில் புறப்பட தயாரானது. அந்த சமயத்தில் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் டிரைவர் என்ஜினை இயக்கிபோது, சக்கரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு புகை வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள், தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீ தடுப்பான் மூலம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து என்ஜினை சரி செய்ய முயன்றும், முடியவில்லை. இதனால் காலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரெயிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு சென்று சின்னசேலம், தலைவாசல், ஆத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்களில் சென்றனர். இதனிடையே திருச்சியில் இருந்து ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து ரெயில் என்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்