‘ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் பலனில்லை’ - ஐகோர்ட்டு கருத்து

வழக்கின் விசாரணையை திருப்பூர் மாவட்ட எஸ்.பி. மேற்பார்வையிட வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-09-08 17:26 IST

சென்னை,

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான மூவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி மற்றும் சித்ரா தேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்தது.

மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதோடு, வழக்கின் விசாரணையை திருப்பூர் மாவட்ட எஸ்.பி. மேற்பார்வையிட வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்