திருச்சி: வாரிசு சான்றிதழை பரிந்துரை செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

விஏஓ பிரபுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.;

Update:2026-01-05 18:06 IST

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சை பெருமாள் பட்டியை சேர்ந்தவர் வாரிசு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து, வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தவரின் குடும்ப உறுப்பினர்கள் விவரத்தை விசாரித்து சான்றிதழ் அனுப்புமாறும் பச்சை பெருமாள் பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபுவுக்கு தாசில் உத்தரவிட்டார்.

அதன்படி, விண்ணப்பித்த நபரின் கிராமத்திற்கு சென்ற குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை விஏஓ பிரபு சேகரித்துள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழை பரிந்துரை செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரும்படி விஏஓ பிரபு கேட்டுள்ளார்.

இதையடுத்து, பணத்தை விஏஓ அலுவலகத்தில் தரும்படி அவர் கூறியுள்ளார். இது குறித்து விண்ணப்பதாரர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரம் பணத்தை அந்த நபரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்துள்ளனர். அந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை விஏஓ அலுவலகத்திற்கு கொண்டு சென்ற விண்ணப்பதாரர் விஏஓ பிரபுவிடம் இன்று கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, விஏஓ பிரபுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்