ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
மேட்டுப்பாளையம் விளையாட்டுத் திடலினை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.;
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் அருகில் வசிக்கும் 58 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-71க்குட்பட்ட மேட்டுப்பாளையம் விளையாட்டுத் திடலினை மேம்படுத்துவது குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், அன்னை சத்யா நகர் அருகில் வசிக்கும் 58 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவது குறித்து திரு.வி.க. நகர் மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டத்தில், அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சேத்துப்பட்டு, மீனாம்மாள் சிவராஜ் நகர் (எம்.எஸ்.நகர்) திட்டப்பகுதியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு கட்டடப் பணியின் இறுதிக்கட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், ராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பி.ஆர்.என். கார்டன் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.