சீட் மட்டுமல்ல... அதிகார பகிர்வுக்கான நேரமிது; காங்கிரஸ் எம்.பி. பேச்சுக்கு தி.மு.க. கண்டனம்
அதிகார பகிர்வுக்கான நேரமிது என காங்கிரஸ் எம்.பி. பேசியதற்கு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து உள்ளார்.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சூழலில், கட்சிகள் அதற்கான தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மாணிக்கம் தாகூர், எக்ஸ் வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல்.
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே!
Time for share of power not only Share of seats.
என தெரிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு தரப்படும் என கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இந்த கோஷம் வலுப்பெற்றுள்ளது.
சீட்டுகளுக்கான பகிர்வு மட்டுமின்றி, அதிகார பகிர்வுக்கான நேரமிது என காங்கிரஸ் எம்.பி. வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவு பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது,
அவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அல்ல. தேசிய தலைவரும் அல்ல. தலைவர்கள் எங்களிடம் பேச வேண்டும். அவர், தன் கட்சியில் உள்ள தலைவர்களிடம் பேசியிருக்க வேண்டும். வெளிப்படையாக, பொதுவெளியில் வந்து இதுபோன்று பேசுவதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவர்களிடம் ஆலோசித்து இருக்க வேண்டும்.
இவரை போன்ற நபர்களாலேயே, காங்கிரஸ் கட்சி நல்ல நிலையில் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இவரை போன்றவர்களை காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் என்றே மக்கள் பார்ப்பார்கள். தி.மு.க. எதிர்ப்பாளர்கள் என பார்க்க மாட்டார்கள்.
அவர்கள் காங்கிரசுக்கு எதிரானவர்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியை வளர்க்க விரும்பவில்லை. அதன் வளர்ச்சியை கெடுக்க விரும்புகிறார்கள்.
இந்த நோக்கத்திற்காக, காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அவர்கள் தி.மு.க. தலைவர்களுடன் அது பற்றி ஆலோசனை நடத்துவார்கள். அந்த குழுவில் இவர் இடம் பெறவேயில்லை என கூறியுள்ளார்.