பனையூரில் நாளை தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்
கரூர் சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தவெக மீண்டு வருகிறது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில், நேற்று கரூர் நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய த.வெ.க. தலைவர் விஜய், அவர்களது குடும்பத்துக்கு ரூ.1.85 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும் உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று உருக்கமாக கூறினார். இதைக்கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் வடித்தபடி நெகிழ்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விஜய்யிடம், ‘நீங்கள் கலங்காதீர்கள். தைரியமாக இருங்கள். துவண்டு போகாமல் மீண்டும் கட்சி பணியில் கவனம் செலுத்துங்கள்' என கூறினர்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.