அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்க தொகை வழங்கும் விஜய்
கல்வி விருது வழங்கும் விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது.;
கோப்புப்படம்
மாமல்லபுரம்:
தவெக தலைவர் விஜய் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். விஜய்யின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டி வருகிறது.
விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது. பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்ப லூர், வேலூர் மாவட்டங்களுக்கு உள்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் குளித்து விட்டு தயாராகி வருவதற்கு மாமல்லபுரத்தில் முகுந்தன் மகால் என்ற திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் பொறுப்பாளர்களாக ராஜேஷ், சபரி என்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.தென் மாவட்டத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. நாளை காலை சரியாக 9 மணிக்கு விழா தொடங்க இருக்கிறது. தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்கப்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைரக் கம்மல் அல்லது வைர மோதிரம் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் விஜய் பரிசு வழங்கி கவுரவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்க தொகை, விருதுகளை வழங்கி மாணவ, மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். பரிசு பெற இருக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்த இருக்கிறார். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் பரிசளிப்பு விழாவை தொடர்ந்து மாமல்லபுரம் நகரம் இப்போதே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. விழா நடைபெறும் இடத்தின் நுழைவு வாயில் வாழை மற்றும் பல்வேறு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விழாவில் பங்கேற்க வரும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மேளதாளங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், செண்டை மேளத்துடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது. 2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடக்கிறது.