'பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' - காங்கிரஸ் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?
காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம். கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதல்-அமைச்சரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.