வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் இந்த கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.