மசூலிப்பட்டிணம் - கலிங்கப்பட்டிணம் இடையே கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல்
புயல் முழுமையாக கரையை கடக்க 3 - 4 மணி நேரங்கள் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.;
ஐதராபாத்,
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல், ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடக்கத் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி, 6 மணி நேரமாக வடக்கு -வடமேற்கு திசையை நோக்கி(நிலப்பரப்பை நோக்கி) மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த இந்தப் புயல் மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. அடுத்த 3-4 மணி நேரத்துக்குள் புயல் கரையைக் கடந்துவிடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 - 110 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் மசிலிப்பட்டினத்தில் மணிக்கு 68 கிலோ மீட்ட வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மோந்தா புயல் எதிரொலியாக ஆந்திராவின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இப்புயலின் தாக்கத்தால் ஆந்திர கடலோரப் பகுதிகளில், ராயலசீமா, தெலங்கானாவின் கடலோரப் பகுதிகளில், சத்தீஸ்காரின் தெற்கு மாவட்டங்களில், ஒடிஸாவில் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக( ரெட் அலார்ட்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் - ரெயில்கள் ரத்து
சென்னை- ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 60க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கி நாடா மார்கத்தில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்து பின்னர் ரயில் சேவை தொடக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்களும் விசாகப்பட்டினத்தில் இன்று விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
7 மாவட்டங்களில் போக்குவரத்து தடை
ஆந்திராவில் கிருஷ்ணா, ஏலூரு,கோதாவரி, கோனசீமா, அல்லூரு சீதாராமராஜு, சிந்தூர், ராம்பச்சோடவரம் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 8.30 முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவப் பணிகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை
புயலால் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காக்கிநாடா, மசிலிப்பட்டினம்,குண்டூர், காவாளியில் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா அரசும், ஆந்திர அரசும் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோந்தா புயல் காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ஒடிசாவின் கஞ்சம், கரையோரப்பகுதியில் அரிப்புக்கு உள்ளாகி, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.