ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேற்கு, வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்;
சென்னை,
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு 23-ந்தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோர பகுதி அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 12 செ.மீட்டர் மழை பதிவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில், 22-ந்தேதி (சனிக்கிழமை) அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது 23, 24 ஆகிய தேதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேற்கு, வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.19-ந்தேதி (நாளை), 20-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
22-ந்தேதி (சனிக்கிழமை) அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த கடல் எல்லைக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.