தமிழகத்தில் ஜன 9 - 12 வரை மழை தீவிரமடையும் - ஹேமச்சந்தர் தகவல்
மழை வாய்ப்பால் காவிரி டெல்டா பிற மாவட்ட விவசாயிகள் அறுவடை தானியங்களை பத்திரப்படுத்துவதுடன் வேளாண்மை பணிகளை ஒத்திவைப்பது நல்லது.;
சென்னை,
கடந்த 5 ஆண்டுகளாக, எல் நினோ, லா நினோ அல்லது இயல்பான காலநிலை எதுவாக இருந்தாலும், ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து கூடுதல் மழை பதிவாகியுள்ளது. காலநிலையைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் சராசரி மழையளவு வெறும் 12.3 மி.மீ. ஆகும். இந்த ஆண்டு (2026) ஜனவரி 1 முதல் 5 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் ஏற்கனவே 7.8 மி.மீ. மழையைப் பெற்றுள்ளது. 2025ல் 24.3 மி.மீ. (உபரி) என மழை பதிவானது. அந்த வகையில் ஜனவரியிலும் மழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 9 முதல் மழைப்பொழிவு தொடங்கவுள்ளதால், விவசாயிகள் அனைவரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் அறுவடைப் பணிகளை முடித்து இருக்க அறிவுறுத்தப்படுகிறது. கொங்கு மண்டலத்திலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், அத்துடன் கடலூர், புதுச்சேரி மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களில் ஜனவரி 9 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும். இந்த பகுதிகள் அதிக மழை பெறும் முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வடதமிழகத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, சேலம், நாமக்கல் மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வரவிருக்கும் நான்கு நாட்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தநிலையில், ஜனவரி 9 முதல் 12 வரை தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரமடைய வாய்ப்புள்ளது மழை வாய்ப்பால் காவிரி டெல்டா & பிற மாவட்ட விவசாயிகள் அறுவடை தானியங்களை பத்திரப்படுத்துவதுடன் வேளாண்மை பணிகளை ஒத்திவைப்பது நல்லது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.