அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்

அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.;

Update:2025-12-25 09:48 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை விசாவை பயன்படுத்துபவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர். இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் பேருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கையை தாண்டி அதிக விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறை கடைப்பிடிக்கப்பட்டது. கணினிமுறையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எச்-1பி விசா வழங்குவதில் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் குலுக்கல் முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அதிக சம்பளம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக புதிய எச்-1பி விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை துறை கூறுகையில், “எச்-1பி குலுக்கல் முறை ரத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி முதல் அமலுக்கு வரும். தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பல நிறுவனங்கள் தகுதியற்றவர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்த இந்த முறையை தவறாகப் பயன்படுத்துகின்றன. புதிய முறையால் ஆரோக்கியமான போட்டி அதிகமாகும்” என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய முறை காரணமாக இந்தியர்கள் அதிகம் பாதிக்கபடலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வேண்டப்பட்ட ஆட்களுக்கு மட்டும் விசாக்களை வழங்கிவிட்டு இந்தியர்களுக்கு பாரபட்சம் காட்டவே இந்த நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்