நைஜீரியா: மசூதியில் குண்டுவெடிப்பு; தொழுகையில் இருந்த 5 பேர் பலி, 35 பேர் காயம்

நைஜீரியாவின் வடக்கே போகோ ஹரம் பயங்கரவாதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், 2009-ம் ஆண்டு முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-25 11:32 IST

லாகோஸ்,

நைஜீரியா நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் மைதுகுரி பகுதியில் கேம்போரு சந்தை பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்றிரவு தொழுகை நடந்து கொண்டிருந்தது. இதற்காக மக்கள் அதிக அளவில் திரண்டு வந்திருந்தனர்.

அவர்கள் மாலை வேளைக்கான தொழுகையை நடத்தி கொண்டிருந்தபோது, மசூதிக்குள் திடீரென தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், பலர் சிக்கி கொண்டனர். அந்த பகுதியே தூசு பரவி புகை மண்டலம் போன்று காட்சியளித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். சம்பவ பகுதியில் தற்கொலை தாக்குதலுக்கான கவச உடைகள் சிதறி கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

அதனை பார்த்த சாட்சிகளும் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று உறுதிப்படுத்தினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன என்று போர்னோ மாகாணத்திற்கான காவல் செய்தி தொடர்பாளர் நஹும் தாசோ கூறினார்.

நைஜீரியா நாட்டின் வடக்கே போகோ ஹரம் பயங்கரவாதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், 2009-ம் ஆண்டு முதல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்