அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.;
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியா மீதான வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவில் இந்தாண்டு தொடங்கி இதுவரை சட்டவிரோதமாக தங்கியிருந்த 350 இந்தியர்களை கைது செய்து நாடு கடத்தினார்.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். மேலும் இந்தியர்கள் அதிகம் பெறும் எச்-1பி விசா விலையை ரூ.90 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். இதனால் இந்தியர்களின் அமெரிக்க கனவு ஏறக்குறைய எட்டாக்கனியானது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தி வருவதற்காக தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி கலிபோர்னியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 பேரை ஐஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோமாக அமெரிக்காவுக்குள் குடியேறி சரக்கு வாகனங்கள் மற்றும் டாக்சிகளை அந்த நாட்டின் ஒட்டுனர் உரிமம் பெற்று அவர்கள் இயக்கி வந்தது தெரிந்தது. அவர்களை சிறையில் அடைத்து அமெரிக்க போலீசார் விசாரித்து வருகிறார்கள்.