உலகம் நாளை அழிய போகிறது; அதனால்... கானா நாட்டு தீர்க்கதரிசியை தேடி ஓடும் மக்கள்
நோவா பேழைகள் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்தில் இருந்து காக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.;
ஆக்ரா,
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புது ஆடைகளை உடுத்தி, உற்சாகத்துடன் ஆலயங்களில் வழிபாடு நடத்துவார்கள். கிறிஸ்துமஸ் தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நட்சத்திரங்களை வீட்டின் முன் தொங்க விட்டும், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்து கொண்டார். இவர் சாக்கு துணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்து இருக்கிறார். அது கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது. சில சமயங்களில் அவர் கூறிய விசயங்கள் ஏறக்குறைய நடந்துள்ளன என கூறப்படுகிறது. இதனால், அவருக்கான சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் டிசம்பர் 25-ந்தேதி (நாளை கிறிஸ்துமஸ் தினத்தில்) உலகம் அழிய போகிறது என கூறி வந்த அவர், அதற்காக மக்களை காக்கும் வகையில் நோவா பேழைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவருடைய பின்தொடர்பவர்கள் தங்களுடைய சொத்துகளை எல்லாம் விற்று அதில் கிடைத்த தொகையை அவருக்கு கொடுத்து உதவியுள்ளனர்.
இந்த பேழைகள் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்தில் இருந்து காக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. நாளை ஒரு பெருவெள்ளம் வரும் என்றும். அதன் மூலம் உலகம் முடிவுக்கு வரும். அதனை கடவுள் செய்வார் என்ற ரீதியில் அவர் கூறி வருகிறார். எனினும், பூமியை அழிக்க மீண்டும் பெருவெள்ளம் ஏற்படாது என வேதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டி கொள்கிறோம். ஆனால், கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். நிறுத்து... என அவருடைய குரல் கேட்கும் வரை பேழையை கட்டி வருகிறேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவரை தேடி சீடர்கள் குவிந்து வருகின்றனர். கால்நடைகள் கூட திரட்டி கொண்டு வரப்படுகின்றன.