இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஹார்முஸ் நீர்முனையை மூடும் ஈரான்? - இந்தியாவுக்கு பாதிப்பா?

உலகளவில் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது.;

Update:2025-06-23 01:08 IST

துபாய்,

அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்- ஈரான் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை, ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் இடையேயான சிறிய கடல்வழிப்பாதையாகும். கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு, உலகின் முக்கிய வழித்தடமாக ஹார்முஸ் நீரிணை இருந்து வருகிறது. உலகளவில் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது.

இந்நிலையில் ஈராக், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடனான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கான 40 சதவீத கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது

இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு இறுதி முடிவு எடுக்க உள்ளது. அவ்வாறு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்