போர் நிறுத்தம் அமலுக்குப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை; ஈரான்

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.;

Update:2025-06-24 15:17 IST

தெஹ்ரான்,

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து கடந்த 11 நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. அதேவேளை, மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா 21ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து மோதல் முற்றிய நிலையில் கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து நடந்த மறைமுக பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஈரான் ஒப்புக்கொண்டன. இதன் மூலம் கடந்த 11 நாட்களாக மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்தது. போர் நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

இதனிடையே, போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலுக்குப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்