ரூ.5 கோடி காப்பீட்டு தொகைக்காக 2 கால்களை வெட்டிய நபர்: கண்டுபிடித்த காப்பீட்டு நிறுவனம்

காப்பீட்டு தொகைக்காக இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியது போலீசார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.;

Update:2025-07-26 08:25 IST

காப்பீட்டு தொகை பெறுவதற்காக கவுண்டமணி கொடுத்த யோசனையின் பேரில் உயிரிழந்தது போல செந்தில் ஒரு படத்தில் நாடகமாடுவார். காப்பீட்டு அதிகாரிகள் வந்து, செந்தில் உயிரிழந்தது உண்மைதானா என சோதனை செய்ய போகிறோம் என்றதும் ஆளை விடுங்கடா சாமி..என்று ஓட்டம் எடுப்பார் செந்தில். படத்தில் நகைச்சுவைக்காக இந்தக் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். சினிமாவில் காமெடிக்காக வைக்கப்பட்ட காட்சியை போல உண்மையாகவே காப்பீட்டு தொகைக்காக ஒருவர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அதாவது, ரூ.5 கோடி காப்பீட்டு தொகை பெறுவதற்காக தனது இரண்டு கால்களையும் துண்டித்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;

பிரிட்டனில் ட்ரூரோவைச் சேர்ந்தவர் 49 வயதான நீல் ஹாப்பர். வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான இவர், மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டில் செப்சிஸால் தனது கால்களை இழந்ததாக கூறி, 5 லட்சம் பவுண்டுகள் (ரூ.5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், நீல் ஹாப்பர் என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.போலீசார் நடத்திய விசாரணையில் இவரது குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.

ரத்த நாள பிரச்சினை இருப்பதாக கூறி உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை அகற்றுவது எப்படி என்பது குறித்து ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2020 வரை, வலைத்தளத்திலிருந்து அவர் வீடியோக்களை பீரிமியம் முறையில் வாங்கியதாகவும், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு மருத்துவரின் உதவியுடன் இதனை எந்த பிரச்சினையும் ஏற்படாமல் செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்